பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன்

பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன் அவரைப் பற்றி எழுதிடத் தகவல் கேட்டறியச் சென்றால் அவரெழுதிச் சொல்வது கோபாலய்யர் பற்றி! ஈவா வில்டன் ஆற்றியுள்ள ஈடில்லாத் தமிழ்த் தொண்டுக்கு அவரின் வழிகாட்டியாக விளங்கிய நூற்கடல் கோபாலய்யர் தூண்டுகோலாகத் துலங்கியவர். நன்றி மறவா ஈவா வில்டன் நூற்கடலுக்கு முதல்மரியாதை தரச்சொல்வதன் மூலம் தமிழுலகில் போற்றத்தகு பண்புடைய பெருமகளாக நம் மனங்களில் இடம் பெறுகிறார்.

தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் சார்பில் கோபாலய்யர் நினைவு நூலாக ஈவா வில்டன் தொகுத்து வெளியிட்ட Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary என்ற நூல் கோபாலய்யரின் தமிழ்ப் பணிகளைப் பட்டியல் இடுகின்றது.

 தேவாரத்தைப் பண்முறையில் ஆய்வு செய்து சொற்பிரிப்பு நிறுத்தக் குறிகளுடன் பதிப்பித்தார்.

மாறனகப்பொருளையும் அதன் இலக்கிய நூலான திருப்பதிக் கோவையாரையும் பதிப்பித்தார்.

வீரசோழியத்துக்கு விரிவான விளக்கம் எழுதினார்

தொல்காப்பியத்துக்கும் அதன் உரைகளுக்கும் பிழையற்ற பதிப்பு வெளியிட்டார்.

 தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதியாக வெளியிட்டார்.

பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய மணிப்பிரவாள நடையில் அமைந்த உரையைத் தமிழாக்கி வெளியிட்டார்.

 ஆலன் டேனியலுக்காக மணிமேகலையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உதவியவர்.

 ழான் செவியரின் சேனாவரையம் பிரெஞ்சு மொழியாக்கத்துக்கு உதவியவர்.

ஜேம்ஸ் ரயானின் சீவக சிந்தாமணி ஆங்கில மொழியாக்கத்துக்கு உதவியவர்.

கோபாலய்யரின் தமிழ்த் தொண்டு மட்டுமல்ல பிரெஞ்சு அரசு நிறுவனமான தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் புதுச்சேரியில் அமைதியான முறையில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளும் போற்றத்தக்கவை. நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை. நன்றி மறவா ஈவா வில்டன் தன் தமிழாசிரியரை முதலிடம் தந்து சிறப்பிக்கிறார். ஆனால் ஈவா வில்டனும் தமிழுக்குழைத்தல் பிற நாட்டு நல்லறிஞர் வரிசையில் முதலிடத்தில் வைத்துப் போற்றித்தரும் புகழ்மிகு பெண்மணியே!

டாக்டர் ஈவா வில்டன் செருமானியே இலக்கியம் கற்றவர். தத்துவ வித்தகர்.இந்தியவியல் ஆய்விலும் தேறியவர். டுயூசெல்டார்ப் டியூபின்சென் ஆம்பர்க்ப்பல்கலைக்கழகங்களில் பயின்றவர். 1996ல் Veda: The Circulation of Sacrificial Gifts என்றத் தலைப்பில் வேதங்களைப் பற்றி முனைவர் பட்டத்தை ஆம்பர்க்கு பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

நற்றிணையைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்தமையால் ஈவா வில்டன் பெயரும் வரலாறும் இடம் பெறுவதில் வியப்பில்லை. நற்றிணைச் செம்பதிப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதியில் 200 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் தொகுதி 201-400 வரையிலான பாடல்களைக் கொண்டது. மூன்றாம் தொகுதி சொல்லகர நிரலாக வெளிவந்துள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள 20 குறுந்தொகைப் பதிப்புகளை ஒப்பாய்வு செய்து செம்பதிப்பை 3 தொகுதிகளாக வெளியிட்டவர் டாக்டர் ஈவா. வில்டன்.

ஜே. எல். செவில்லார்டுடன் இணைந்து அகநானூற்றையும் வெளியிட அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் ஈவா. வில்டன்.

இப்படி தமிழுக்குத் தொண்டு புரிய இவருக்குத் தூண்டுகோலாக விளங்கியவர் ஆம்பர்க்கு பல்கலைக் கழகப்பேராசிரியர் சீனிவாசன் ஆவார். குறுந்தொகை மொழியாக்கம் ஆய்வேடாக 2002ல் ஆம்பர்க்கு பல்கலைக் கழகத்தில் அளிக்கப்பட்டது. இந்த நூலுக்காக இவர் கலந்தாய்ந்த அறிஞர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவருக்கு வடமொழி கற்பித்த பேராசிரியர் அல்பிரெச்ட் வெசுலா பேராசிரியர் இலம்பர்ட்டு சுமிதாசன் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

பேராசிரியர் டி. ஓபன்சகாயா (ஆம்பர்க்கு) டாக்டர் ழான் லக் செவில்லார்டு (பாரிசு) மற்றும் செய்யுலியலைப் புரிந்து கொள்ள அதிலும் களவு பற்றி அறிய டோக்கியோவில் ஒரு மாதம் தங்கி பேராசிரியர் டி. தகாஆசியிடமும் விளக்கம் பெற்றார். பிரேக்கு நகரில் பேராசிரியர் செ. வாசெக்கு அவர்களிடமும் மாஸ்கோவில் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபாய்ன்சுகியிடம் ஆய்வுக்காக அறிவுரை பெற்றதை ஈவா வில்டன் Literary Techniques in Old Tamil Cankam Poetry என்ற ஆய்வேட்டில் பதிவு செய்கிறார்.

சங்க இலக்கியத்தை ஆய்வு செய்ய விளக்கம் அளிக்கக் கூடிய இத்துணைச் சான்றோர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ள முடியும். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்ட ஒரு கால்டுவெல்! குறுந்தொகையைப் செம்பதிப்பு கொண்டுவர ஒரு ஈவா வில்டன்! நற்றிணையை மொழியாக்கம் செய்து நானில மறியச் செய்யவும் ஈவா வில்டன். மொழியாக்க முன்னோடிகள் தமிழுக்குத் தரும் ஊக்கம் தமிழ்நாட்டவர் செய்யத்தவறிய குறைகளை நீக்கும். சோம்பிக்கிடக்கும் தமிழறிஞர்க்கு ஏக்கம் பிறக்கும்! சொந்த மொழிச் சேவையில் பிறநாட்டு நல்லறிஞர் முந்துகிறார் என்ற நிலை நமக்கு அளிக்கட்டும் ஆக்கம்!

  தமிழ்மாமணி நந்திவர்மன்

Novelist Nagarathinam Krishna’s new novel on Senji

செஞ்சியை மையமாக வைத்து அடுத்த நாவலை
பிரான்சில் வாழும் புதுச்சேரி எழுத்தாளர் எழுதுகிறார்.
 

நாகரத்தினம் கிருஷ்ணா புதுச்சேரியில் பிறந்து பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரில் வாழ்பவர்.நாவலாசிரியர்.இவரின் நீலக்கடல் நாவலுக்கு தமிழா அரசு 2007ல் வெளிவந்து அயல் நாடுகளில் வாழும் இந்தியர்கள் எழுதிய படைப்புக்களில் சிறந்த படைப்பு என்று விருது வழங்கியுள்ளது. இந்நாவலில் புதுச்சேரியில் இருந்து அடிமைகள் மொரீஷியஸ் தீவுகளுக்கு ல்போர்தொனே அங்கு கவர்னராகவும் துய்ப்பிளேக்ஸ் இங்கு கவர்னராகவும் கடத்தப்பட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார்.
 
கல்கி,சாண்டில்யன்,ஜெகச்சிற்பியன்,பிரபஞ்சன் போல் சரித்திரத்தை நாவலாக்குபவர்.இவர் 2009 ஆகஸ்டில் புதுவை வந்த போது திராவிடப்பேரவை பொதுச்செயலாள்ர். நந்திவர்மனை அவரில்லத்தில் சந்தித்த போது நந்திவர்மன் தமிழ்ப்பண்பாடு என்ற தலைப்பில் தான் எழுதிய நூலை பரிசளித்தார்.
 
நாகரத்தினம் கிருஷ்ணா எழுதி வெளிவந்துள்ள நூல்கள்: கவிதை: 1. அழுவதும் சுகமே -கவிதைத் தொகுப்பு. சிறுகதைகள்: 1. கனவு மெய்ப்படவேண்டும் 2. நந்தகுமாரா நந்தகுமாரா —— நாவல்கள்: 1. நீலக்கடல் – தமிழ் நாடு அரசின் பரிசுபெற்ற நாவல் 2. மாத்தா ஹரி ————– கட்டுரைகள்: 1. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் 2. சிமொன் தெ பொவ்வார் – ஓரு திமிர்ந்த ஞானசெருக்கு மொழிபெயர்ப்புகள்: 1. நவீன பிரெஞ்சு சிறுகதைகள் 2. காதலன் – மார்கெரித் துராஸ் – பிரெஞ்சு நாவல் 3. வணக்கம் துயரமே – பிரான்சுவாஸ் சகாங் பிரெஞ்சு நாவல் ஆகும்.
 
 பிரஞ்சு மொழியில் வெளி வந்த புகழ் பெற்ற நாவலை அவர் தமிழில் வெளியிட்டுள்ளார். அந்த நாவல் பற்றிய சிறு குறிப்பு பின் வருமாறு:  எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, ‘காதலன்'(L’Amant – The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

இவர் நந்திவர்மன் எழுதிய நூலைப் படித்து விட்டு நந்திவர்மன் நூலில் உள்ள செஞ்சிக்கோட்டை வரலாற்றால் கவரப்பட்டு தன் அடுத்து நாவலை செஞ்சியை மையமாக வைத்து எழுதப் போவதாக நந்திவர்மனுக்கு நாகரத்தினம் கிருஷ்ணா கடிதம் எழுதிஉள்ளார்

அன்பிற்குரிய திரு. நந்திவர்மன் அவர்கட்கு வணக்கங்கள்! இக்கடிதம் தங்கள் தமிழர் நாகரீகம் என்ற ஆங்கில நூல்குறித்தது. நூலை வாசித்தபோது, தமிழரென சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் கைவசமிருக்கவேண்டிய ஆவணமென புரிந்தது. தங்கள் எழுத்தும் சொற்களும் இன  உணர்வின்பாற்பட்டவை  போற்றுதலுக்குரியவை. எனினும் சொல்லவந்த செய்திகளை தெளிவாக முன் வைக்கிறீர்கள். சொந்த மொழி, சொந்த இனமென்ற மயக்கங்களில்லை, போதையில்லை. சொல்வது உண்மையென்பதால் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்களில் வீச்சும், பாய்ச்சலும், ஏராளம். சிந்துவெளி குறித்த தேசிய மாநாட்டில் வாசிக்கபட்ட ஆய்வுக் கட்டுரை ஓர் அரிதான கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டது. பழமைவாய்ந்த அப்பண்பாடும் மொழியும் திராவிடருக்குச் சொந்தமென பெருமிதத்தோடு சொல்லவந்த நீங்கள் அதற்கு உரிய சான்றுகளையும் அக்கறையுடன் சேகரித்து கட்டுரையை உருவாக்கியிருக்கிறீர்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் ஆய்வுமுடிவுகளை துணைசேர்த்திருப்பது கட்டுரைக்கு வலு சேர்க்கிறது. நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாட்டிற்காக எழுதியதென்ற குறிப்புடன் கூடிய பத்திகளும் பொதுவாகப் பல அரிதானத் தகவல்களைத் தருகின்றன. கவனத்துடன் ஆர்வத்துடனும் இரண்டாவது முறையாக வாசித்தேன். முதல்முறை வாசித்து முடித்தபோதே உங்களுக்கு எழுத உட்கார்ந்து, பாராட்டு என்பது சடங்காக முடிந்துவிடக்கூடாது, வாசிப்பு அனுபங்களை பகிர்ந்துகொள்வதே சரியாதாக இருக்குமெனத் தள்ளிவைத்தேன். மீண்டும் இரண்டாவது முறையாக வாசித்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படியொரு நூலை எழுதியமைக்கும் அதை எனக்குப் பரிசாக அளித்தமைக்கும் மிக்க நன்றி. இல்லையெனில் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்காது. தமிழ் நாட்டில் நல்ல நூல்களை சந்தைப்படுத்துபவர்கள் மிகவும் குறைவென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக மீண்டும் நன்றிகள். தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசிக்க முடிந்தது. ஒரு சில கட்டுரைகளை கூடுதல் ஆர்வத்துடன் வாசித்தேன். பிரெஞ்சு மொழியோடு தமிழருக்கான உறவுகள் என்ற கட்டுரை நான் விருப்பிவாசிக்க என்ன காரணமென விளக்கவேண்டியதில்லை. ஞானு தியாகு, தாவீது அன்னுசாமி போன்றவர்களின் உழைப்பை அறிவோம். அவர்கள் மாத்திரமல்ல புதுச்சேரியில் அண்மையில் மறைந்த திருமுருகனார் உழைப்பைக்கும் உரிய மரியாதையை புதுவை மக்கள் அளிக்கவில்லை, இப்படி அங்கே இன்னமும் நிறையபேர் இருக்கிறார்கள். அதுபோலவே தேசிகப் பிள்ளையின் உழைப்பு. மிகப்பெரிய தமிழரிஞரை உரியவகையில் அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு, உங்கள் கட்டுரை எனக்கு ஆறுதலாக இருந்தது. நாராணகுருவை பற்றிய கட்டுரையும் பல புதிய தகவல்களை எனக்களித்தது; அவர் தமிழ் நாட்டில் தேசாந்திரியாகத் திரிந்தார் என்பதை அறிந்தவன்; ஆனால் அவரிடமுள்ள தமிழ் மொழி அறிவும் ஆற்றலுடன் தமிழில் கவிதைகள் எழுதகூடியவரென்பதும், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் குறித்து அவர் எழுதிய தேவாரப் பதிகங்கள் எனற நூலைப் பற்றிய தகவல்களும் எனக்குப் புதியவை. சைவ சித்தாந்தத்தின் கோட்டை என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையிலும் பொருள்பொதிந்த தகவல்கள் ஏராளமாக இருந்தன. அப்போதே ஜார்ஜ் பூரே என்ற பிரெஞ்சுக்காரர் நம்மவர்கள் தாய்மொழியில் பற்றற்றவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டி வருந்தியதாக நீங்கள் தெரிவித்திருந்த செய்தி யோசிக்க வைத்தது.

செஞ்சியின் பெருமை, தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் என்னை மிகவும் ஈர்த்ததென்று சொல்லவேண்டும், மிக நுணுக்கமான அரிதான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. செஞ்சியையும் தேசிங்கு ராஜனையும் மையமாக வைத்து ஒரு புனைவினை எழுதுவதென முடிவெடுத்திருக்கிறேன். அம்முடிவு உங்கள் கட்டுரை அளித்துள்ள தூண்டுதல்.

சிற்பங்கள் குறியீடுகள் குறித்த பத்தி, புதுச்சேரி வாழ் பிரெஞ்சு குடிமகன்கள் அவர்களுக்கான பிரநிதித்துவ தேர்தல் பற்றிய செய்திகள் தாங்கிய பத்தி, நாகர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வரலாற்று இணக்கம் குறித்த பத்தி என சிறப்பித்து சொல்ல நிறைய இருக்கின்றன. பநேரங்களில் தமிழினம் இன உணர்வு மழுங்கிவிட்டதே என நினைப்பதுண்டு, இத்தொகுப்பில் மறைந்த புதுச்சேரி திராவிடக் கழகத் தலைவரின் திருமகன் தமிழ்மணியுடைய மொழியுணர்வை பாராட்டி இருப்பீர்கள். தொகுப்பை வாசித்தபோது கடைசிவரை உங்களுடைய இன உணர்வின் மூச்சினை உணரமுடிந்தது. உங்களைப்போல ஒன்றிரண்டுபேர் இருந்தால்கூட போதும் தமிழும் தமிழனும் கடைத்தேறுவார்கள். அன்புடன் நாகரத்தினம் கிருஷ்ணா